கட்டுரை

மூன்றாவது அணியை எங்கே அழைத்துச் செல்கிறார் வைகோ?

அரசியல் செய்தியாளர்

பொதுவாக கடந்த சில தேர்தல்கள் என்றால் சுவாரசியமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் மக்களை உற்சாகமாக வைத்திருந்தவர் விஜயகாந்த் ஒருவராகத்தான் இருந்தார். இந்த தேர்தலில் அவருடன் மக்கள்நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இந்த விஷயத்தில் சேர்ந்துகொள்ள, தேர்தல்களம் தினந்தோறும் பரபரப்பானதாக மாறிவிட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து போராடிப்பெற்ற கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து அவர் கடைசிநேரத்தில் பின்வாங்கியது ஒரு  ‘செமை’யான திருப்பம். இன்னும் மீதி இருக்கும் நாட்களில் இன்னும் பல திகிலூட்டும் திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்களான வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். விஜய், அஜீத் படங்களின் கதைகளைக்கூட ஊகித்துவிடமுடியும். ஆனால் இந்த தேர்தல் பிரச்சார களத்தின் கதைகளை மட்டும் ஊகிக்கவே இயலாது.

அதிமுக, திமுக, ம.ந.கூ.-தேமுதிக -தமாகா - என மூன்று அணிகள் இறங்க, 2016 தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும்போட்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. தான் அடர்த்தியாக இருக்கும் இடங்களையும் தாண்டி பாமக ‘பவர்’ காட்டுகிறது! சீமான் 234 தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்தியிருக்கிறார். இந்த போட்டிக்கு சம்பந்தமில்லாமல் இன்னொரு மூலையில் பாஜக அணி களத்தில் உள்ளது.   தமிழகம் கடந்த இரண்டு தேர்தல்களில் கண்ட அணிச்சேர்க்கையுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தல் வித்தியாசமான அணிச்சேர்க்கையைக் கண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச்சின்னத்திலேயே போட்டியிடுகிறது அதிமுக. இதுமுதல்வர் ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அவர் நினைத்திருந்தால் இடதுசாரிகள், தமாகா, மதிமுக போன்ற கட்சிகளை தன் அணியில் சேர்த்திருக்க முடியும். ஆனால் அக்கட்சிகளுக்கு மட்டுமில்லாமல் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற சின்னக் கட்சிகளுக்கும் கதவை இறுக அடைத்துவிட்டு நிற்கிறார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, இடதுசாரிகள், பு.த.,  மனிதநேயமக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக் என்ற விரிவான கூட்டணியுடன்  தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அந்த தேர்தலில்  கூட்டணிக்கட்சியான மதிமுகவுக்கு  சீட் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆகவே மதிமுக தேர்தலில் போட்டியிடவே இல்லை. தேர்தல் முடிந்ததும் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மிகவும் விருப்பப்பட்ட இடதுசாரிகளை ஜெயலலிதா, கூட்டணியில் சேர்க்கவில்லை. ம.நே.ம., பு.த. போன்ற கட்சிகளையும் அவர் வெளியேற்றிவிட்டு, தனியாக தேர்தலைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.  அத்தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் மூன்றாவதாக அணி அமைத்திருந்தன. இரண்டு எம்பி தொகுதிகளையும் வெல்ல முடிந்தது.  திமுக அணி பெற்றதோ பூச்சியம்!

இந்த வெற்றி கொடுத்த தெம்பில்தான் 2016 தேர்தலை ஜெ. மீண்டும் தனியாக எதிர்கொள்கிறார். எதிரணியில் நிற்கும் திமுக, எல்லா கட்சிகளையும் சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டது. அதிமுகவோ எவரும் வேண்டாம் என்று சொல்லி கதவை அடைத்துவிட்டது.

 இந்த பின்னணியில் ஒரு மூன்றாவது அணியும் இந்த தேர்தலில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இந்த மூன்றாவது அணியின் சூத்திரதாரியாக ஜெயலலிதாதான் இருக்கிறார் என்பதை சற்று நுட்பமாகப் பார்த்தால் உணரமுடியும்.

இதற்கான களத்தில் காய்களை ஜெயலலிதாதான் நகர்த்தினார்.  2014 தேர்தலிலேயே கதவடைக்கப்பட்ட இடதுசாரிகளை மீண்டும் தன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாததன் மூலமும், மதிமுக பக்கம் திரும்பியும் பார்க்காததன் மூலமும்  வி.சி.க.வால் முன்னெடுக்கப்பட்ட  கூட்டணி பக்கம் அனுப்பி வைத்தார்.  திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் பலிக்காத பின்னணியில் கௌரவமான ஓர் அணியில் இடம்பெறும் என்ணத்தில் தேமுதிக   இருந்தபோது, எல்லா இறுக்கங்களையும் கைவிட்டு ம.ந.கூட்டணி விஜய்காந்தை தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து பெரும் சாதனை செய்ததாக மார்தட்டிகொண்டது.  உண்மையில் தேமுதிக திமுவுடன் போகாமல் இருந்ததில் நிம்மதி அடைந்தவர் ஜெயலலிதாதான்!  ஏனெனில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணி எப்படியும் வென்றுவிடும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

லயோலாகல்லூரியின் மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம் இதை உறுதிப்படுத்துகிறார். “இந்த ஜனவரியில் நாங்கள் எடுத்த கணிப்பில் திமுக அதிமுக இடையே சிறிய வித்தியாசமே இருந்தது. அடுத்த ஆட்சி அமைய யாருக்கு வாய்ப்பு என்று கேட்டபோது திமுகவுக்கே வாய்ப்பு என்று கூறியவர்கள் 2 சதவீதம் அதிகம் இருந்தனர். ஏனெனில் அப்போது தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் திமுக அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனவே திமுக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவே நடந்திருந்தால் மெல்ல திமுகவுக்கு ஆதரவான மனநிலையும் வாக்காளர்களிடம் உருவாகி இருக்கலாம்” என்கிறார் அவர்.( காண்க பேட்டி)

ஒரிருநாளில் கூட்டணியை அறிவிப்பேன் என்று சொல்லியே மாதக்கணக்கில் கார்டன் வாசலில் தவம்  கிடந்த வாசனுக்கும் ஜெ,  பாராமுகம் காட்டி  ம.ந.கூ பக்கம்  தள்ளிவிட்டார். 

திமுக எப்படியாவது தேமுதிக என்கிற பழம் கனிந்து விழும் என்று  எதிர்பார்த்தது. ஆனால் அதற்குக் கிடைத்தது காங்கிரஸ் என்கிற உலர்ந்த பழம்தான்.( ஏற்கெனவே கொஞ்சம் தசைப்பற்றான பகுதிகளை வாசன் பிடுங்கிக்கொண்டுவிட்டார்)

இதுதான் 2016 கள நிலவரம். கடந்த இரண்டு தேர்தல்களில் இந்த அணிகள் பெற்ற வாக்குகøளைப் பார்த்தால் இந்த மூன்றாவது அணி யாருக்கு உதவியாக இருக்கும் என்பது புரியும்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணி (அதிமுக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம்,  ம.நே.ம. க., பு.த.  பா.பி) - 1.90 கோடி வாக்குகளைப் பெற்றது. அதற்கு அடுத்து வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்ற அதிமுக 1.70 கோடி வாக்குகளைப் பெற்றதுடன் அல்லாமல் 37  தொகுதிகளையும் வென்றது. 1.08 கோடி வாக்குகள் பெற்றும் திமுக அணியால் ஒரு தொகுதிகூட வெல்ல முடியவில்லை. 75 லட்சம் வாக்குகளைப் பெற்ற மூன்றாவது அணி இரண்டு இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

‘’ பாமகவும் காங்கிரசும் திமுக அணியில் இல்லாத நிலை அதற்கு மேலும் தோல்வியைத் தந்தது. வலுவான கூட்டணியால்தான் இதற்கு முன்வந்த தேர்தல்களில் திமுக வென்று வந்தது. இம்முறை அது இல்லாமல் போனது” என்று சுட்டிக்காட்டுகிறார் அரசியல் விமர்சகர்.

 சரி.. 2016 தேர்தலுக்கு வருவோம். 2014 உடன் ஒப்பிடுகையில் கள நிலவரத்தில் பெரிய மாறுதல் இல்லை. அதிமுக தனியாக நிற்கிறது. எதிரில் பெரும் படை திரட்டி நிற்கவேண்டிய திமுக மேலும் கூட்டணிக்கட்சிகளை இழந்து, உடைந்த காங்கிரஸ், இரண்டு முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் நிற்கிறது. முதலில் தடுமாறியதுபோல் தோன்றினாலும் இப்போது முன்னோக்கி நகர்கிறது திமுக அணி.

வழக்கமாக அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுவந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி. இதில் இடம்பெறாதது பாமக மட்டுமே. அது தனியாக நின்று வடமாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பிரித்து பலர் வெற்றிவாய்ப்பில் மண்ணை அள்ளிப்போடும்.

 என்ன ஆகும்?

கூட்டணி என்பது தேர்தலில் வெறும் கூட்டல் கணக்கு மட்டும் அல்ல. பலமுறை பலமான கூட்டணிகள் மண்ணைக் கவ்வி இருக்கின்றன. அதற்கான வரலாறு தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.  ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறதா?  2015 இறுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் எந்த மாதிரியான மாற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திஉள்ளது?  என்பவை முக்கியமான கேள்விகள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்ட ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இருப்பினும் செல்வாக்கு குறையவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு இயற்கை அளித்த வாய்ப்பாக வெள்ளமும், அச்சமயம் செயல்படாத அரசு நிர்வாகத்தின்மீதான மக்கள் அதிருப்தியும் வந்தன. இதுதான் திமுகவுக்குக் கிடைத்த அரை வாய்ப்பு.  இதைப் பயன்படுத்திக்கொள்வது அக்கட்சியின் கையில்தான் இருக்கிறது. சுமார் 60 தொகுதிகள் இந்த பாதிப்பு எல்லைக்குள் வருகின்றன. அதிமுக செல்வாக்கு சரிவதற்கு அதுவொரு தொடக்கம். ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாக இதுபோன்ற சம்பவங்களே தொடக்கப்புள்ளி.

நிச்சயமாக 2011 -ல் திமுக மீது இருந்த வெறுப்பு இப்போது வாக்காளர்களிடம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிமுகவுக்கு தான் தான் மாற்று என்று முன் வைக்கும் திமுகவின் கோஷத்தை மூன்றாவது அணியினர் மழுங்க அடிக்கின்றனர். 2014 தேர்தலில் மூன்றாவது அணி பெற்ற 75லட்சம் வாக்குகளை மீண்டும் பெறக்கூடும். பாமகவால் குறையும் வாக்குகளை இடதுசாரிகளும் விசிகவும் ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் மூன்றாவது அணிக்கு களத்தில் வெற்றிவாய்ப்பு இருக்கிறதா?  உணர்ச்சிப்பிழம்பான வைகோவும், தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கிற விஜயகாந்துமாக அந்த அணி தடுமாறுகிறது. போட்டியிலிருந்து யாரிடமும் ஆலோசிக்காமல் விலகிகொண்டதன்மூலம் வைகோ தன் அணியை எதைநோக்கி அழைத்துச்செல்கிறார்? பொதுவாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்காத அணிக்கு தங்கள் வாக்குகளைப் போட்டு வீணடிக்க நடுநிலை வாக்காளர்கள் விரும்புவதில்லை. மூழ்கும் கப்பலுக்கு ஆதரவு இருக்காது. இதை அவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது. அத்துடன் சென்றமுறை மூன்றாவது அணியில் பாஜக இருந்தது. அதன்  ‘பலம்’ இந்தமுறை மூன்றாவது அணிக்கு இல்லை என்பதால் பெருமளவு வாக்குகளைத்  திரட்டுவது சிரமமே.

“ மாற்று என்று சொல்லிக்கொண்டுவந்த மூன்றாவது அணி, தங்கள் சொந்தக் கொள்கைகளை அடகு வைத்தது தான் அவர்கள் கொண்டுவந்திருக்கும் மாற்று. இவர்களுக்கு தங்கள் வழக்கமான வாக்குவங்கியின் கூட்டுத்தொகையைத் தாண்டிச் செல்வதற்கான வாய்ப்பு இந்த தேர்தலில் இல்லை” என்கிறார் பேராசிரியர் ராஜநாயகம்.

திமுகவில் வி.சி.க இல்லை. பதிலாக காங்கிரஸ் உள்ளது. அது 17 லட்சம் வாக்குகளை 2014 தேர்தலில் பெற்றது. தமாகா எழு லட்சம் வாக்குகளைப் பிரித்ததாகக் கொண்டால் திமுகவுக்கு காங்கிரசால் பத்து லட்சம் வாக்குகள் கூடுகின்றன.  எப்படிக்கூட்டிப்பார்த்தாலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் அதிமுக சுமார் 40-50 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. ஆனால் “2014 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜெயலலிதா பிரதமர் ஆவார் அல்லது மத்திய ஆட்சியில் முக்கிய பங்குவகிப்பார் என்ற எண்ணத்தில் வாக்களித்தது அவருக்குப் பெருவெற்றியை ஈட்டித்தந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த இந்த வாக்களிப்பை இந்த சட்டமன்றத் தேர்தலில் விழ இருக்கும் வாக்களிப்புகளுடன் ஒப்பிட முடியாது”என கருத்து தெரிவிக்கிறார் பேரா.ராஜநாயகம்.

இம்முறை 5.79 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. போனதடவையை விட ஒரு கோடிப்பேர் அதிகமாம். இதில் எத்தனை போலி வாக்காளர்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைமைகள் புகார் கூறியுள்ளன.  சுமார் 70  சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு (2014 தேர்தலில் 73.6%) இருந்தால் இதில் சுமார் 4.9 கோடிப்பேர் வாக்களிக்ககூடும்.  ஆக,  வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முதல்முறை வாக்களிக்கும்  18-19 வயதுக்குட்பட்ட வர்களே 18 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை யார் கவர்வார்கள் என்பதும் முக்கியமானது. ஐந்தாண்டு ஆண்ட கட்சி என்பதாலும் மாற்றத்தை  விரும்பி வாக்களிப்பது, தமிழ்நாட்டில்  எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் நடப்பதாலும் அதிமுகவுக்கான வாக்குகள் குறையும் என்பது இயல்பானதே.  இந்த குறையும் வாக்குகள் எந்த அளவுக்குக் குறைந்து திமுகவுக்கு ஆதரவாக மாறும் என்பதுதான் இந்த தேர்தலின் பரமரகசியம்.

இதுபோன்ற நெருக்கடியான போட்டிகளில் கட்சிசாராத வாக்காளர்கள்தான் முக்கியமானவர்கள். வாக்களிப்பவர்களில் சுமார் 20 

சதவீதம் பேர் கட்சி சாராதவர்கள் என்று கருதப்படுகிறது. திருவாளர் பொதுஜனமான இவர்கள் எந்தப்பக்கம் சாய்வார்கள்? களநிலவரங்களை அலசும்போது திமுகவின் தரப்பில் உற்சாகம் காணப்படுகிறது. இன்னும் சிலநாட்களில் நிலைமை தெளிவாகும்.

திருவாளர் பொதுஜனம் இப்போதைக்கு அமைதியாக தங்களை நோக்கி மொட்டை வெயிலில் காய்ந்து வந்துகொண்டிருக்கும் வேட்பாளர்களையும் தலைவர்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறைதான் அவருக்கு இந்த அதிகாரம் கிடைக்கும். அதை அனுபவிக்கிறார். வீடு தேடி காலில் விழும் வேட்பாளரும் கவரில் காசு தந்து கவனிக்கும் வேட்பாளருமாக  ஜமாய்க்கிறார்!. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  இந்த தேர்தலில் அவருக்கு பலம் கூடுகிறது. அதற்கான களத்தை அமைத்தவர் ஜெயலலிதா. திருவாளர் பொதுஜனம் அதற்காக அவருக்கு நன்றி சொல்கிறார்!

2011 சட்டமன்றத் தேர்தல்

 பதிவான வாக்குகள்:

3.68 கோடி

அதிமுக அணி

(அதிமுக, தேமுதிக,

சிபிஐ, சிபிஎம், ம.நே.ம.க.,

பு.த. பா.பி)     1.90 கோடி

திமுக அணி

(திமுக, காங்கிரஸ், பாமக,

விசி, கொமுக)-          1.45 கோடி

அதிமுக 45.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது.

2014 நாடாளுமன்றத் தேர்தல்

 பதிவான வாக்குகள்: 4.06 கோடி

அதிமுக பெற்ற வாக்குகள்: 1.7 கோடி

திமுக அணி : 1.08 கோடி

(திமுக, விசி,மநேம, முஸ்லிம் லீக், பு.த)

தே.ஜ.கூ :       75 லட்சம்

(தேமுதிக, பாமக, பாஜக,

மதிமுக, ஐஜேகே, கொமுக, பு.நீ)

காங்கிரஸ்:     17 லட்சம்

மே, 2016.